அழுகிய நிலையில் இருந்த சடலம்…. பெண்ணை கொன்று புதைத்த மர்ம நபர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மர்ம நபர்கள் பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு அமைந்துள்ளது. அங்கு பள்ளம் தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நேற்று மதியம் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பள்ளத்தை தோண்டி பார்த்தனர். அப்போது சாக்குமூட்டையில் தலையில் படுகாயங்களுடன் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து மீண்டும் அதே பள்ளத்தில் புதைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, மர்மநபர்கள் யாரோ அந்த பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் உடலை கட்டி புதைத்திருக்கலாம். இந்தப் பெண் யார் என்ற விவரம் தெரியவில்லை. எனவே பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *