
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவின் கோஸ்கலான் பகுதியில் சோபியான்(3) என்ற சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஆறு தெரு நாய்கள் சிறுவனை கடித்து குதறி இழுத்து சென்றது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அந்த நாய்களை விரட்டி அடித்தனர். இதனை அடுத்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.