அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மணிகண்டன், ரவி, மகாலிங்கம், மோகன்தாஸ், உதயகுமார், சுந்தர லிங்கம் ஆகிய ஆறு தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக காரில் ஊட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் வெஸ்ட்புரூக் அருகே சென்று கொண்டிருந்த போது கோத்தகிரி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து முன்னால் சென்ற பொக்லைன் எந்திர வாகனத்தை முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கம் மற்றும் ரவி ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.