சீனாவில் 1949 ஆண்டு காலத்தில் சீனர்களின் சராசரி ஆயுட்காலம் 36 ஆண்டுகளாக இருந்தது. தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. எனவே சீனாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60 ஆகவும், பெண்களுக்கு 55 ஆகவும் இருந்தது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு 5 பேரில் ஒருவர் 60 வயது மேற்பட்டவர் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் சீனாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார சிக்கலை தவிர்க்க அந்நாட்டு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஓய்வு பெரும் வயது ஆண்களுக்கு 60-லிருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆகவும், உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு 50-ல் இருந்து 55 ஆண்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2025 ஜனவரி முதல் அமலுக்கு வரவுள்ளதாக சீனா அரசு அறிவித்துள்ளது. மேலும் சட்டபூர்வமாக ஓய்வூதிய வயதை அடைந்த தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வது, அடிப்படை உரிமைகளை கொடுப்பது, முதியோர் பராமரிப்பு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள 14 ஆவது தேசிய மக்கள் காங்கிரஸ் நிலை குழுவின் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.