அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி… என் சாவுக்கு காரணம் மாமியார்தான்… கூலித்தொழிலாளி விபரீத முடிவு…!!!

குமரி மாவட்டம் அருகே தன் சாவுக்கு மனைவி மற்றும் மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஆசாரிமார் தெருவில் நாகராஜன் (48) என்பவர் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான அவருக்கு கவிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வீட்டில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியதால், கவிதா கணவருடன் சண்டை இட்டுக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு தன் மகன்களுடன் சென்றுவிட்டார்.

அதனால் நாகராஜன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், நேற்று முன்தினம் மாலை ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது நாகராஜன் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். அது பற்றி உடனடியாக பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நாகராஜன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு வீட்டை சோதனையிட்டதில், நாகராஜன் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த 8 பக்க கடிதம் போலீசாருக்கு சிக்கியது. அந்தக் கடிதத்தில் என் மரணத்திற்கு காரணம் என் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உறவினர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என் மனைவி என்னுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தாள். அதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் எழுதியிருந்தார். இதனையடுத்து நாகராஜனின் சகோதரர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.