கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா பரமசாகர் அருகே ஹலோ ரங்கபுரா கிராமத்தில் திப்பேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மஞ்சுநாத் என்ற மகன் இருந்துள்ளான். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த மஞ்சுநாத் தனது தாயிடம் சென்று வயிறு பசிக்கிறது உணவு வேண்டும் என கேட்டுள்ளான். உடனே கௌரம்மா உணவு செய்ய தாமதமாகும் என கூறினார்.
ஆனாலும் சிறுவன் அடம்பிடித்ததால் பக்கத்து வீட்டிற்கு உணவு வாங்குவதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மகன் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மஞ்சுநாத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் மஞ்சுநாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உணவு கேட்டு அடம் பிடித்ததால் திப்பேஷ் மஞ்சுநாத்தை அடித்து கொன்றது தெரியவந்தது. இதனால் தலைமறைவாக இருக்கும் திப்பேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.