அமுல் வந்தாலும் ஆவின் அதை சமாளிக்கும்… அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி…!!!!!

நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 9 ஆயிரத்து 673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அமைந்துள்ளது. இதில் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 35 லிட்டர் பால்  விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் வசதி இருக்கிறது. இதனை இனி வரும் ஆண்டு 70 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும் அது ஆவினை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் அமுல் வந்தாலும் ஆவின் அதனை சமாளிக்கும். குஜராத் அரசு தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக எதுவும் பேசவில்லை. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல் போல  தெரிகிறது. அதனால் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு இரண்டு விஷயங்களை கூறி கடிதம் எழுதியுள்ளார். அதாவது அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை. பொதுவாக ஒரு மாநிலத்தில் செயல்படுகிற ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றொரு  மாநிலத்தில் தலையிடுவதில்லை. அமுல் கொள்முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகின்றார்கள்.

ஆனால் ஆவினில் பல்வேறு சாதகமான விஷயங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஆவின் சார்பாக மாடுகளுக்கு காப்பீடு உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் ஒரு லட்சம் மாடுகளுக்கு தான் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மாடுகளையும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயித்து  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் பணம் வழங்கப்படுகிறது.

ஆவின் பால் ஏற்றுமதி தேவை அதிகமாக இருக்கிறது. ஆவினை உலக தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளது. எருமை மாடு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சில திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பால் பொருட்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் சுவையை  அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர்  தெரிவித்துள்ளார்.