அமமுக – பாமக இடையே கைகலப்பு… கார் கண்ணாடி உடைப்பு… பெரும் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் அமமுக மற்றும் பாமகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்ததால் வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி சில இடங்களில் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி நெமிலி அரசு பள்ளி வாக்குச் சாவடி அருகே அமமுக மற்றும் பாமகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினர் மோதலில் கார் கண்ணாடி சேதமடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.