அனுமதியின்றி சிறப்பு காட்சி நேரத்தை மீறி நள்ளிரவில் வாரிசு, துணிவு படங்களை வெளியிட்டதாக 34 திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு தமிழ்நாடு முழுவதும் வெளியானது. தமிழ் திரையுலகத்தின் ஸ்டார் நடிகர்களான விஜயின்  வாரிசு, நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படங்களும் ரசிகர்களின் சிறப்பு காட்சியாக நள்ளிரவு ஒரு மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு ஒரே நாளில் வெளியாகி இருந்தது. மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 17க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் அஜித் நடித்த துணிவு படமும், 13-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தான் வாரிசு மற்றும் துணிவு படங்களை நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படங்கள் 11ஆம் தேதி, 12ஆம் தேதி, 13-ஆம் தேதி, 18 ஆகிய 4 நாட்களில் காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தான் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு துணிவு மற்றும் வாரிசு படங்கள் திரையிடப்பட்டதாக கூறி மதுரையில் மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் 1957ன் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து குறிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் திரையரங்குகள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் திரையரங்குகள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்கு உரிமை சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை என்பது எடுக்கப்படும் என ஆட்சியர் கொடுத்துள்ள நோட்டீஸில் எச்சரிக்கை கொடுத்துள்ளது.