இந்தியாவில் இமயமலையின் அடிவா`ரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஜோஷிமத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தாண்டி தான் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்களுக்கு செல்ல முடியும். அதோடு இந்த கிராமத்தில் ஏராளமான இயற்கை எழில் மிகுந்து கிடப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகம். ஆனால் எந்த அளவுக்கு ஜோஷிமத் கிராமத்தில் அழகு இருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது. இந்த கிராமத்தில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிய நிலையில், பல வீடுகளும் இடிந்து விழ தொடங்கியுள்ளது.

அதோடு பல வீடுகளின் சுவர்களிலும் விரிசல் விழுந்ததோடு சாலைகளிலும் விரிசல் விழ ஆரம்பித்து விட்டது. இந்த பகுதியில் சுமார் 15000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், மொத்த கிராமமே மண்ணுக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல்வரின் ஆலோசனையின் படி அங்குள்ள மக்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரை மார்க்கமாக மீட்பு பணியில் ஈடுபட்டால் பிரச்சனை அதிகரிக்கும் என்பதால், ஹெலிகாப்டர் உதவியுடன் பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.