ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக போன்ற கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதன்படி இபிஎஸ் தரப்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராகவும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு பாஜக போட்டியிட்டால் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் தனித்தனியாக போட்டியிட்டால் திமுகவுக்கு பலமாக இருக்கும் என்பது எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரிவதில்லை. நான் அதிமுகவில் பிரிந்து கிடக்கிற அனைவரிடமும் சந்தித்து ஆதரவு கேட்க போகிறேன்.
அந்த வகையில் சசிகலாவையும் கண்டிப்பாக நான் நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று கூறியுள்ளார். மேலும் அதிமுக கட்சியில் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் கட்சிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறிவரும் நிலையில் ஒருவேளை அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக தேர்தலில் வெற்றியும் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் சசிகலாவை சந்தித்து பேசுவது தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.