அதிகரித்து வரும் ராணுவ தாக்குதல்…. பயத்தில் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்…. திருப்பி அனுப்பும் தாய்லாந்து…!!

மியான்மர் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பயந்து மக்கள் தாய்லாந்திற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மியான்மரில் நடைபெற்று வந்த மக்கள் ஆட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 510 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் இன ஆயுத குழுவால் ஒன்றிணைந்த கிராமங்களின் மீது விமானம் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதனால் கிராமங்களில் உள்ள ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்த நிலையில் அண்டை நாடான தாய்லாந்து எல்லையில் உள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை கண்டுபிடித்த தாய்லாந்து அரசு தஞ்சமடைந்தவர்களை மீண்டும் மியான்மருக்கு செல்லுமாறு வலியுறுத்தி வருகின்றது. மேலும் மியான்மரில் இருந்து இதுவரை 3000 பேர் தஞ்சமடைய வந்துள்ளதாகவும், அதில் 2000 பேரை திருப்பி அனுப்ப உள்ளதாகவும் தாய்லாந்து அரசு தகவல் தெரிவித்துள்ளது.