குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில்  பலா மரங்கள் ஊடுபயிராக பயிரிடப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமவெளி பகுதிகளில் இருந்து பலா பழ சீசன் காலங்களில் பலா பழங்களை சாப்பிட  காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கமாக உள்ளது. இதனால் மலைப்பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். கடந்த 20 நாட்களாக , சமவெளி பகுதிகளில் இருந்து 9 காட்டு யானைகள் உணவை தேடி குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் பகுதியில் முகாமிட்டு உள்ளன.

இதனையடுத்து  காட்டு யானைகள் சாலையை கடந்து , குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் ,பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால் குன்னூர் அருகே தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அதன் நடமாட்டத்தையும்  கண்காணித்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு வருவதால், தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வப்போது யானைகள் சாலையை கடப்பதால், வாகன ஓட்டிகள் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது. மேலும் வனத்துறை மூலம் குழுக்கள் அமைத்து காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.