மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷாபுரத்தில் முத்துராமன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் முத்துராமன் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்போனில் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இவர் செல்போனில் அடிக்கடி விளையாடுவதால் மனைவி அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துராமன் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சவுந்தரி அவரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராமன் தன் மனைவியை கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். இதனால் சவுந்தரி மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துராமன் தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டோமோ என நினைத்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அவருடைய மனைவி கண்விழித்து பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து முத்துராமனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த  பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.