பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் 2 ரயில்வே ஊழியர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிப்பதால் அவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் பீகாரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஒருமுறை கிடையாது.

பலமுறை நடந்திருக்கிறது. அதாவது ரயில் இன்ஜின் திருட்டு, பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்ட ரயிலின் பாகங்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள் போன்றவைகள் அடுத்தடுத்து திருடப்பட்டு இருக்கிறது. ஆனால் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டது இதுதான் முதல் முறை. மேலும் இந்த ரயில்வே தண்டவாளத்தை திருடிய குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருவதோடு வேறு ஏதேனும் பகுதிகளில் ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.