அசத்திய மந்தனா….. “ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 3,000 ரன்கள்”….. குவியும் வாழ்த்துக்கள்..!!

 இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்..

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையே 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 333/4 ரன்கள் குவித்தது. ஹர்மன் பிரீத் கவுர் 111 பந்துகளில் (18 பவுண்டரி, 4 சிக்ஸர்) 143* ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஹர்லீன் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் எடுத்தனர்.. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.2 ஓவரில் 10 விக்கெட் இழந்து 245 ரன்கள் எடுத்து தோற்றது.

இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்த ஒரு நாள் போட்டி அவருக்கு 76 ஆவது போட்டியாகும். இப்போட்டியில் 40 ரன்கள் எடுத்ததன் மூலம் 3000 ரன்களை அதிவேகமாக கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.. இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 88 போட்டிகளில் தான் 3000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார்.

தற்போது அந்த சாதனையை ஸ்மிருதி மந்தனா தகர்த்தெறிந்து விரைவாக ஒரு நாள் போட்டிகளில் 3000 ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அளவில் 3ஆவது நபர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.. அவருக்கு முன்னதாக ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 76 போட்டிகளில் இந்த சாதனையை  நிகழ்த்தி 3ஆவது இடத்தில் உள்ளார் மந்தனா.. சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *